எச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்பால் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அதிகரிக்கும்: ராஜ்நாத் சிங்
17 February 2026
கர்நாடக மாநிலம் வெமகலில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் மற்றும் ஏர்பஸ் நிறுவனம் இணைந்து அமைத்துள்ள எச் 125 (H125) ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலையின் இறுதி அசெம்பிளி வரிசையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி கடந்த பத்து ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து, உலக நாடுகளின் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, 2014-இல் ரூ. 900 கோடியாக இருந்த பாதுகாப்புத் துறை ஏற்றுமதி, தற்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். எவரெஸ்ட் சிகரம் போன்ற உயரமான பகுதிகளில் பறக்கும் திறன் கொண்ட இந்த எச் 125 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும், இது பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் ஏற்றுமதி இலக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 1,000 கோடிக்கும் அதிகமான முதலீடு ஈர்க்கப்படுவதோடு, இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.