இந்தியா வெடிமருந்து உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாற வேண்டும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்வேகம்!

18 January 2026

இந்தியா இனி பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக மட்டும் இருக்கக் கூடாது; மாறாக, வெடிமருந்து உற்பத்தியில் உலகளாவிய மையமாக (Global Hub) உருவெடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள 'சோலார் டிஃபென்ஸ்' (Solar Defence and Aerospace) நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள நடுத்தர ரக வெடிமருந்து உற்பத்தி (Medium Caliber Ammunition Facility) மையத்தை இன்று (ஜனவரி 18) அமைச்சர் தொடங்கி வைத்தார். இது முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் ஒரு நவீன தொழிற்சாலையாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்துப் பாராட்டு தெரிவித்தார்:

பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1,000 கோடியாக இருந்த பாதுகாப்புப் பொருட்களின் ஏற்றுமதி, தற்போது ரூ. 25,000 கோடியைக் கடந்துள்ளது. இதனை 2029-30 நிதியாண்டிற்குள் ரூ. 50,000 கோடியாக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.


முன்பு வெடிமருந்து தட்டுப்பாட்டால் நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலை பாதிக்கப்பட்ட காலம் இருந்தது. ஆனால் இன்று இந்தியா அந்த பலவீனத்தை வென்று 'ஆத்மநிர்பார் பாரத்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தரமான ஆயுதங்களைத் தயாரிக்கிறது.
பினாகா ஏவுகணை ஏற்றுமதி
இந்த நிகழ்வின் போது, நாக்பூர் ஆலையில் தயாரிக்கப்பட்ட 'கைடட் பினாகா' (Guided Pinaka) ஏவுகணைகளின் முதல் தொகுதியை ஆர்மீனியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளையும் அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்புகளுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
நவீன காலப் போர்முறை
இன்றைய போர்முறைகள் எல்லைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை என்றும், தொழில்நுட்பம், தகவல் பரிமாற்றம் மற்றும் விநியோகச் சங்கிலி (Supply chain) ஆகியவையும் போரின் புதிய பரிமாணங்களாக மாறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள உள்நாட்டுத் தொழில்நுட்பமும், தடையற்ற ஆயுத விநியோகமும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.