ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி கோவிலில் தேர் திருவிழா

30 June 2025

ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! 8 ம் தேதி தேரோட்டம்! 


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடமேற்கு பகுதியில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில் பெத்தவநல்லூர் அருள்மிகு மாயூரநாத சுவாமி கோயில் ஆகும். சிவநேசி ஒருவருக்கு மகப்பேறு உதவி செய்து பார்வதி தேவியும் பரமசிவனும் நேரில் வந்து உதவி செய்து காயல் குடி ஆற்றில் இருந்து நீர் கொடுத்து காட்சியளித்ததாக கோயில் ஸ்தல வரலாறு. இந்த கோவிலில் ஆனிப் பெருந் திருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. காலையில் ஆகம விதிகளின்படி சிவாச்சாரியார்கள் கோவில் கொடிமரத்திற்கு விளைந்த நெற்கதிர்கள் மாயிலை உள்பட மங்கள பொருட்களை கட்டி வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். மங்கள வாத்தியம் முழங்க சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றி வைத்து அருள்மிகு மாயூர்நாத சுவாமி மற்றும் அருள்மிகு அஞ்சல் நாயகி அம்மன் அஸ்தரதேவருடன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் கோவில் தக்கார் சர்க்கரை அம்மாள், கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் உள்பட கோவில் ஊழியர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். வரும் 6ம் தேதி மாலையில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணமும், 8ம் தேதி காலையில் திருத்தேரோட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.