மக்களவை சபாநாயகரைச் சந்தித்த ராகுல் காந்தி
09 February 2026
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்றத்தில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, விதிகளை மீறி அமளியில் ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது கவலையைத் தெரிவித்தார்.
மேலும், ராணுவ முன்னாள் தளபதி நரவானேவின் புத்தகம் தொடர்பான விவாதத்தில் தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்றும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களின் போது எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.