நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தொழிலாளர் கொலை 8 மாதங்களுக்கு பிறகு கொலையாளி கைது
28 November 2025
நெல்லை முக்கூடல் பாப்பாக்குடியை சேர்ந்த துப்புரவு தொழிலாளி பால்ராஜ் (32) கடந்த மார்ச் மாதம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பிணமாக கிடந்தார். முதலில் அவர் குடிபோதையில் விழுந்து உயிரிழந்தார் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
பால்ராஜுடன் தகராறில் ஈடுபட்டதாக சிசிடிவி காட்சியில் தெரிந்த வாலிபரை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. துணை கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில், ஆய்வாளர் பச்சைமால் மற்றும் குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.இறுதியில் 8 மாத தேடலுக்குப் பிறகு, திருவனந்தபுரம் திருவள்ளம் பகுதியைச் சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி சுமேஷ் (29) கைது செய்யப்பட்டார். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கோபத்தில் பால்ராஜை அடித்ததாக அவர் ஒப்புக்கொண்டார். குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படையினரை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.