மோதல்கள் நிறைந்த உலகில் இந்தியா அமைதியைத் தருகிறது: குடியரசுத் தலைவர்
25 January 2026
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தற்போதைய பதற்றம் மற்றும் மோதல்கள் நிறைந்த உலகச் சூழலில் இந்தியா அமைதியை நிலைநாட்டும் சக்தியாகத் திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
தனது உரையில் 'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்ட 150-வது ஆண்டைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தமிழ் கவிஞர் பாரதியார் இப்பாடலுக்குத் தனது கவிதைகள் மூலம் மேலும் வலிமை சேர்த்ததை நினைவு கூர்ந்தார்.
நாட்டின் வளர்ச்சிப் பாதையில் மகளிரின் பங்களிப்பு, விளையாட்டுத் துறையில் அவர்கள் படைத்த சாதனைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் இளைஞர்களின் முன்னேற்றம் ஆகியவற்றைப் பாராட்டிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஜனநாயகத்தின் அடிப்படை ஆவணமாக விளங்கும் அரசியலமைப்பைப் போற்றிப் பாதுகாப்பதோடு, நாட்டின் துடிப்பான குடியரசை வலுப்படுத்தும் ராணுவ மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவைகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.