தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இவற்றில் மிகவும் பழமை வாய்ந்த பதிமலை முருகன் கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அந்தக் கோவிலின் சிறப்பு மற்றும் அந்த கோவில் குறித்து இப்போது பார்க்கலாம்…
கோயம்புத்தூர் பகுதியில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் குமிட்டிபதி பகுதியில் குன்றின் மேல் அமைந்துள்ள ஒரு சிறப்பு வாய்ந்த கோவில்தான் இந்த பதிமலை முருகன் கோவில்…
இந்த கோவில் ஒரு குன்றின் மீது தான் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல படிகளின் மீது ஏறித்தான் செல்ல வேண்டும்.. மொத்தமாக 350 படிகள் உள்ளன. இந்தக் கோவிலில் குன்றின் மீது முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார்.
கோவில் கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோளத்தில் காட்சியளிக்கிறார். இதேபோன்று கருவறை வாசலின் இடது பக்கம் விநாயகர் காட்சியளிக்கிறார். மேலும் கோவிலின் இடது பக்கத்தில் அன்னை சக்தி தேவி தனி சன்னதி அமைந்துள்ளது.
இந்த குன்றின் மேல் அமைந்துள்ள வற்றாத கிணற்றிலிருந்து தான் சுவாமிக்கு எப்போதும் அபிஷேகம் செய்யப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலின் குகை ஓவியங்கள் சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என கூறப்படுகிறது.
இந்த கோவிலில் பொதுவாக திருமண தடை விலகுவதற்காக சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இதேபோன்று குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு வழிபாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தனக்குள்ள பல்வேறு பிரச்சனைகளை மக்கள் இந்த முருகப்பெருமானிடம் மனம் உருகி கோரிக்கை வைக்கும் போது அவர்களுடைய பிரச்சனை விரைவில் சரியாகிறது என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்தக் கோவிலில் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள் ஆன தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் திருவிழா போல் களைக்கட்டும். மேலும் அந்த தினங்களில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
குறிப்பாக இந்த கோவிலுக்கு செல்வதற்காக இரண்டு படி வழிகள் உள்ளன. ஒன்று அந்தக் காலத்திலேயே மலைக்குச் செல்வதற்காக செதுக்கப்பட்ட கரடு முரடான பாதை.
மற்றொன்று தற்போது பக்தர்களின் வசதிக்காக முறையாக அமைக்கப்பட்ட படிப்பாதை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முருகப்பெருமானுக்கு தமிழகம் முழுவதுமே பல்வேறு கோவில்கள் இருக்கும்போதிலும் இந்த கோவிலுக்கு நாம் சென்று வரும்போது நம்முடைய சங்கடங்கள் அகளும் என மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும் இந்த கோவிலுக்கு நாமும் ஒரு விசிட் அடித்துதான் பார்ப்போமே!!!