தமிழகப் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு: ஊதியம் ரூ.15,000 ஆக உயர்வு!
14 January 2026
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஊதியம் ரூ.12,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி மற்றும் தையல் போன்ற பாடங்களை நடத்தும் 12,483 பகுதிநேர ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த ஊதிய உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இவர்களது ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த ரூ.2,500 உயர்வு அவர்களுக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
பகுதிநேர ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.