பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா: பூச்சாட்டுதலுடன் கோலாகலத் தொடக்கம்

17 March 2026

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, பூச்சாட்டுதலுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. நேற்று (16.03.2026) நள்ளிரவு நடைபெற்ற பூச்சாட்டு விழாவில், சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்கப் பங்கேற்றனர். விழாவின் தொடக்கமாகக் கோவில் முறைதாரர் அம்மனின் படைக்கலத்தைச் சுமந்து அருகில் உள்ள முக்கியத் தலங்களுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்தார். பின்னர் கருவறையில் அம்மனிடம் 'உத்தரவு' கேட்கப்பட்டபோது, வெள்ளை அரளிப்பூ விழுந்ததையடுத்து குண்டம் விழாவிற்கான பணிகள் தொடங்கின.
முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா வரும் மார்ச் 31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று முதல் அம்மன் சப்பர வீதி உலா தொடங்குகிறது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர்கள் புறப்பட்டு சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்குவார்கள். தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.