பொருளாதார மற்றும் போர் நெருக்கடிகளைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
13 March 2026
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதுடன், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, உலகளாவிய பொருளாதார மற்றும் போர் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக "பொருளாதார நிலைப்படுத்தல் நிதி" (Economic Stabilisation Fund) என்ற பெயரில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நிதித் தொகுப்பை உருவாக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று அறிவித்துள்ளார். முன்னதாக, சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட நிலையில், இந்த முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.