நேபாள விபத்தில் பலியான 7 தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை

15 March 2026

தமிழ்நாட்டின் பொள்ளாச்சி மற்றும் தேவக்கோட்டைப் பகுதிகளைச் சேர்ந்த 24 பேர் நேபாளத்தில் உள்ள மணகமனா கோவிலுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டனர். நேற்று (14/03/2026) தரிசனம் முடித்துத் திரும்பும் வழியில், மனோக்காம் பகுதியில் அவர்கள் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தத் துயரமான சம்பவத்தில் முத்துக்குமார், அண்ணாமலை ஆகிய 2 ஆண்கள் மற்றும் மீனாட்சி, சிவகாமி, விஜயாள், மீனா, தமிழரசி ஆகிய 5 பெண்கள் என மொத்தம் 7 தமிழர்கள் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 7 பேர் சித்வான் பழைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன், தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை, நேபாளத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு காத்மாண்டு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விரைவில் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளன. சென்னை வந்தடையும் உடல்களைத் தமிழக அரசின் இலவச அமரர் ஊர்திகள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை விரைவாகத் தாயகம் அழைத்து வரவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது.