விஜய் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
13 February 2026
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பில் திமுக மற்றும் அதிமுகவை விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியலில் அனுபவம் இல்லாத விஜய்க்கு, "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?" என்ற பழமொழியே பொருத்தமான பதில் என்று குறிப்பிட்டார்.
கூட்டங்கள் கூடுவதால் மட்டுமே வாக்குகள் கிடைத்துவிடாது என்றும், விஜயகாந்த் காலத்திலேயே அதிகப்படியான கூட்டங்கள் கூடியும் அது வாக்குகளாக மாறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், விஜய் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று தெரிவித்த நயினார் நாகேந்திரன், வரவிருக்கும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார். நிஜ வாழ்க்கையில் குடும்பத்தினருடன் நல்ல உறவைப் பேணாதவர், முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து மக்களைச் சந்திக்கப் பழக வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.