மியான்மர் சுதந்திர தினம்: 6,134 கைதிகள் விடுதலை!
05 January 2026
பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து 1948-ம் ஆண்டு விடுதலை பெற்ற மியான்மர் நாடு, தனது 78-வது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியது. இந்த நாளை முன்னிட்டு அந்நாட்டு ராணுவ அரசு சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து மொத்தம் 6,134 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட உள்ளனர்.
விடுவிக்கப்படுபவர்களில் 52 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற மிகக்கடுமையான குற்றங்களில் ஈடுபடாத இதர கைதிகளின் சிறை தண்டனை காலமும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது