பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் யாமினி(20) பனசங்கரியில் உள்ள கல்லூரியில் பி பார்ம் படித்து வந்தார். இவர் நேற்று கல்லூரியில் இருந்து மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டபோது மல்லேஸ்வரத்தில் உள்ள மந்திரி வணிக வளாகம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் யாமினியை வழிமறித்து தகராறு செய்து தன்னிடம் இருந்த மிளகாய் பொடியை யாமினின் கண்ணில் வீசினார். இதனைத் தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யாமினியை கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த யாமினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர் தப்பி ஓடினார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தவுடன் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில் சுதந்திர பாளையாவை சேர்ந்த விக்னேஷ் என்பவர் யாமினியை காதலித்து வந்ததாகவும் அதை அவரிடம் தெரிவித்த போது அவர் மறுத்துள்ளதால் அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் தொடர்ந்து தன்னை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த விக்னேஷ் நேற்று யாமினி வரும்போது அவரை எதிர்பார்த்து காத்திருந்து இவ்வாறு செய்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் தலைமறைவான விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.