பிரதமர் மோடியின் மார்ச் மாத தமிழக வருகை
18 February 2026
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை தமிழகம் வரவுள்ளார். கடந்த ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக மார்ச் 1-ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 6-ஆம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மார்ச் 11-ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி ஓரளவு உறுதியாகியுள்ள நிலையில், மார்ச் 1-ஆம் தேதி பிரதமரின் வருகையின் போது தேமுதிக உள்ளிட்ட இதர கட்சிகளும் கூட்டணியில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பிரதமரின் இந்த அடுத்தடுத்த வருகைகளுக்கு முன்னதாகவே தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் குறித்த முழுமையான விவரங்கள் இறுதி செய்யப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.