பிரதமர் மோடியின் தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகை

27 February 2026

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு சென்னை வருகிறார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 1-ஆம் தேதி காலை புதுச்சேரிக்குச் செல்லும் அவர், அங்கு சுமார் ரூ. 2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்றைய தினம் மதியம் 3 மணியளவில் மதுரைக்கு வருகை தரும் பிரதமர், ரூ. 4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார்.
மேலும், மரக்காணம்-புதுச்சேரி மற்றும் பரமக்குடி-ராமநாதபுரம் இடையேயான புதிய நான்கு வழிச் சாலைப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் 8 ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைக்கிறார். இதுதவிர, கும்பகோணம், ஏற்காடு மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் புதிய ஆகாஷ்வாணி எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.