தமிழக வருகையை எதிர்நோக்கும் பிரதமர் மோடி

10 March 2026

நாளை (மார்ச் 11, 2026) தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதை தான் பெரிதும் எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நாளை மாலை 4.30 மணி அளவில் திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். அதோடு, திருச்சியில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலை மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவடைந்த வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சிட்டி கேஸ் விநியோகக் கட்டமைப்பு மற்றும் 89 கிராமப்புற சாலைத் திட்டங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. தனது கேரளா மற்றும் தமிழக வருகை அந்தந்த மாநிலங்களின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.