தமிழகம் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது - பிரதமர் மோடி பேச்சு

23 January 2026

தமிழகம் இப்போது மாற்றத்திற்குத் தயாராகிவிட்டதாகவும், திமுகவின் ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், 2026-ம் ஆண்டில் தமிழகத்திற்கு மேற்கொள்ளும் தனது முதல் பயணம் இது எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் நிலவும் குடும்ப ஆட்சி மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் துடிப்பதாகவும், திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.


கடந்த 11 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத நிதியை ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஊழலற்ற ஆட்சியை வழங்க தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக இருப்பதாகக் கூறினார்.


தமிழகத்தின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், மாநிலத்தின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.