கிருஷ்ணகிரியில் ரூ.516 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
13 March 2026
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, மொத்தம் 516.36 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். இவ்விழாவில், ஊரக வளர்ச்சி, நீர்வளம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 41.51 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 500 புதிய திட்டப்பணிகளை அவர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஓசூரில் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடம், சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் உயர்மட்டப் பாலங்கள் அமைத்தல் என 147.92 கோடி ரூபாய் மதிப்பிலான 709 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், வருவாய்த்துறை, மகளிர் திட்டம் மற்றும் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 10,709 பயனாளிகளுக்கு 326.93 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3,500 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், மாணவர்களுக்கான கல்விக்கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களையும் நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.