சபரிமலை செல்லும் வழியில் கோர விபத்து!! 21 பேருக்கு படுகாயம்!!

27 November 2025

கேரளாவின் செங்குத்தான மலைப்பாதைகளில் ஐயப்ப பக்தர்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ,இடுக்கி மாவட்டம் குட்டி கானம் அருகே (27.11.25) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் 21 பக்தர்கள் படும் காயங்களுடன் உயிர்த்தப்பினர். கொல்லம் - தேனி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கரூரில் இருந்து 21 ஐயப்ப பக்தர்களை ஏற்றிச்சென்ற இப் பேருந்து சுமார் அதிகாலை 6:00 மணி அளவில் குட்டிக்கான பகுதியில் ஒரு வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது, ஒருவருக்கு தலையில் பலத்த காயமும் மற்றவருக்கு கையில் பலத்த காயமும் ஏற்பட்டதுடன் 20 பேர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இச்சம்பவத்தை கண்ட உள்ளூர் வாசிகள் உடனடியாக பீர்மேடு நெடுஞ்சாலை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு  தெரிவித்தனர். அவர்கள் அடிபட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். ஓட்டுனர்களுக்கு மலைப்பாதைகளில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. ஓட்டுநர்கள் மலை பாங்கான பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தை இயக்குமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க பக்தர்களும் ஒத்துழைக்குமாறு அவர்கள் தெரிவித்தனர்.

 திரு. ச.சந்திரமோகன்,
செய்தியாளர், திண்டுக்கல் மாவட்டம்.