திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை: கனிமொழி எம்.பி. விளக்கம்

10 February 2026

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது தொடர்பாகச் சலசலப்புகள் நிலவுவதாகக் கூறப்படும் சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், தனிநபர்களின் கருத்துக்களுக்கெல்லாம் கட்சி பதில் சொல்ல முடியாது என்றும், திமுக மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு இடையே மிகவும் இணக்கமான நல்லுறவு நீடிப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்தார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்தே செயல்படும் எனக் குறிப்பிட்ட அவர், தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைக் குழு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், திமுக அரசு இதுவரை 400-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் சில திட்டங்களைச் செயல்படுத்துவதில் சவால்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.