90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கிய முதலமைச்சர்

11 October 2025

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயல் இசை நாடக துறையில் பல ஆண்டுகளாக சேவை செய்து வருபவர்களுக்கு இந்த கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன. மொத்தம் 90 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் குறிப்பாக பாரதியார் விருதை (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கு முதலமைச்சர் வழங்கினார். மேலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை)  கே.ஜே.யேசுதாஸ்க்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இதேபோன்று பத்மஸ்ரீ முத்து கண்ணம்மாளுக்கு பால சரஸ்வதி விருது வழங்கப்பட்டது.


மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சாய் பல்லவி, எஸ் ஜே சூர்யா, மணி கண்டன், இயக்குனர் லிங்குசாமி, நடிகர் விக்ரம் பிரபு, பாடலாசிரியர் விவேகா, நடிகர் ஜார்ஜ் மரியான், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குனர் சாண்டி ஆகியோருக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.