ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்

11 February 2026

ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் புகழ்பெற்ற மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.


வழக்கமாக அனைத்துக் கோவில்களிலும் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம், இங்கு மட்டும் சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்ப நாயனாரின் சிறப்பை விளக்கும் வகையில் 13 நாட்கள் கொண்டாடப்படுவது தனிச்சிறப்பாகும்.


விழாவின் தொடக்கமாக, அலங்கார மண்டபத்தில் உற்சவர் பக்த கண்ணப்பருக்குச் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, மேள தாளங்கள் முழங்க கைலாச மலையில் உள்ள பழமையான கண்ணப்பர் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு வேதப் பண்டிதர்கள் மந்திரங்கள் ஓத, கொடி மரத்தில் கண்ணப்பர் கொடி ஏற்றப்பட்டு பிரம்மோற்சவம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், கண்ணப்பருக்கு ஆராதனை செய்த பின்னரே காளஹஸ்தீஸ்வரருக்குப் பூஜைகள் செய்யும் மரபு இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.