ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு: 30 பேர் பலி
03 February 2026
ஜப்பானில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஜப்பானின் அமோர் நகரில் சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு பனி படிந்துள்ள நிலையில், வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ உள்ளிட்ட பகுதிகளில் பனியை அகற்றும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த இயற்கை பேரிடரால் விமான மற்றும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டின் கூரைகளில் இருந்து விழும் பனிக்கட்டிகளாலும், பனியை அகற்றும் பணியின் போதும் மக்கள் காயமடைந்து வருவதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 20-ஆம் தேதி முதல் நீடித்து வரும் இந்த பனிப்பொழிவால் ஜப்பான் முழுவதும் கடும் குளிரும் பதற்றமான சூழலும் நிலவி வருகிறது.