பீர் குடிக்கும் போட்டியில் விபரீதம்: 19 பீர் குடித்த இரண்டு ஐ.டி. ஊழியர்கள் உயிரிழப்பு
20 January 2026
ஆந்திர மாநிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பீர் குடிக்கும் போட்டியில் ஈடுபட்ட இரண்டு மென்பொருள் (IT) ஊழியர்கள், அதிகப்படியான மது அருந்தியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்குமார் (34). இவர் சென்னையில் ஐ.டி. ஊழியராகப் பணியாற்றி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த புஷ்பராஜ் (26) என்பவரும் வேறொரு நகரில் ஐ.டி. ஊழியராகப் பணியாற்றி வந்தார். இருவரும் சங்கராந்தி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
சங்கராந்தி விடுமுறையில் நண்பர்களுடன் பொழுதை கழிக்க விரும்பிய இவர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமான மலைப்பகுதிக்கு மது பாட்டில்களுடன் சென்றுள்ளனர். அங்கு நண்பர்களிடையே "யார் அதிக பீர் குடிப்பது?" என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் மணிக்குமாரும் புஷ்பராஜும் போட்டி போட்டுக்கொண்டு மதியம் 3 மணி முதல் இரவு 7:30 மணி வரை சுமார் 19 பீர் பாட்டில்களைக் குடித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இருவருக்கும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக நண்பர்கள் அவர்களைப் பிலேரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மணிக்குமார் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட புஷ்பராஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அதிகப்படியான மது அருந்தியதே இவர்களின் மரணத்திற்கு முதன்மைக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் மது அருந்திய மற்ற நான்கு நண்பர்கள் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக ஊருக்கு வந்த இளைஞர்கள் மதுப் பழக்கத்தால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.