மேற்காசியப் போர்: நாடாளுமன்றத்தை விட்டு மோடி ஓடிவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

09 March 2026

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உலகளவில் பெரும் பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பிரதமர் மோடி அஞ்சுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து நடத்திய போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்காசிய நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்திலும் பங்குச்சந்தையிலும் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதாரச் சீரழிவு போன்ற பொதுப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம் என்றும், ஆனால் மக்கள் சந்திக்கும் இந்த உண்மையான சிக்கல்களைப் பற்றி பேச பாஜக அரசு விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே பிரதமர் இந்த விவகாரத்தில் மெளனம் காப்பதாகவும், விவாதத்திற்கு அஞ்சி அவர் நாடாளுமன்றத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் ராகுல் காந்தி காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.