காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலி
04 February 2026
காசாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 17 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த மோதலில் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது போர்நிறுத்த ஒப்பந்தங்களுக்குப் பிறகும் வன்முறை தொடர்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டத்தை ஏற்று, கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
காசா சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் மட்டும் இதுவரை 530-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஆயுதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளின்றித் தவித்து வரும் சூழலில், சர்வதேச அமைதி மாநாட்டின் மூலம் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படாதது அங்குள்ள பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.