இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி மாற்றம்: ஈரானுக்குப் பதில் வெனிசுவேலா

01 February 2026

ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்தியா இனி வெனிசுவேலாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அங்கு நிலவும் புதிய சூழலைப் பயன்படுத்தி, அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தத் தொடங்கியுள்ளது.


இதற்கிடையில், ஈரானில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இது குறித்து புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வெனிசுவேலாவுடனான எண்ணெய் வர்த்தகத்தில் சீனா ஆர்வம் காட்டுவதைப் போலவே இந்தியாவும் இணக்கம் காட்டும் என்றும், இதற்கான ஒப்பந்தப் பணிகள் ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக இந்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் ஏதும் அளிக்கப்படவில்லை.