இந்திய அணிக்கு மோசமான தோல்வி: 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
22 February 2026
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் அகமதாபாதில் நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, டேவிட் மில்லரின் அதிரடி அரைசதத்தால் (63 ரன்கள்) நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. டெவால்ட் பிரேவிஸ் (45) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (44*) ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். இந்திய தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் (0) மற்றும் அபிஷேக் சர்மா (15) ஏமாற்றமளித்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்த போதிலும், இந்திய அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்குச் சுருண்டது. தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ யான்சென் 4 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.