திருப்பரங்குன்றம் தர்காவில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
09 February 2026
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.பி. வரலே அடங்கிய அமர்வு உறுதி செய்துள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, பக்ரீத் மற்றும் ரமலான் போன்ற சிறப்பு பண்டிகை நாட்களில் மட்டுமே தர்காவில் தொழுகை நடத்த அனுமதி உண்டு என்றும், மற்ற நாட்களில் அனுமதி கிடையாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தர்கா பகுதியில் விலங்குகளைப் பலியிட விதிக்கப்பட்ட தடையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அந்தப் பகுதி இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது என்றும், அங்கு தொழுகை நடத்துவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை என்றும் வாதிட்டார். இருப்பினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமநிலையானது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதில் தலையிட மறுத்துவிட்டனர்.