பழனியில்... மாமன்னர் திருமலை நாயக்கரின் செப்பேடு கண்டுபிடிப்பு..
07 December 2025
பழனியில்... மாமன்னர் திருமலை நாயக்கரின் செப்பேடு கண்டுபிடிப்பு..
திண்டுக்கல், பழனியில் திருமலை நாயக்கரின் செப்பேடு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பழனிமலை முருகனுக்கு திருமஞ்சனம் மற்றும் அவர் உருவாக்கிய தர்ம மடவாலயம் பற்றி இச்செப்பேடு விரிவாகக் கூறுகிறது.
பழனியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாபு சந்தானம் அவருடைய உறவினரான கனகராஜ் என்பவரிடம் ஒரு செப்பேடு இருப்பதாகவும் அதைப் படித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதை அடுத்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அந்தச் செப்பேட்டை ஆய்வு செய்தார். பின்பு அது குறித்து அவர் கூறியதாவது :
இந்தச் செப்பேடு 1500 கிராம் எடையுடனும் 29.5 × 46 செ.மீ அளவுடனும் உள்ளது.
செப்பேட்டின் முகப்பில் மயில்மேல் அமர்ந்த நிலையில் முருகனும், இடது ஓரம் அரியணையில் அமர்ந்த நிலையில் திருமலை நாயக்கரும், வலது ஓரம் சஞ்சீவி மூலிகையை எடுத்துவரும் அனுமனும் கோட்டுருவங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளனர்.
சின்னோப நாயக்கர், புலிப்பாணி, தவராசபண்டிதர் ஆகியோர் முன்னிலையில் இருபுறமும் மொத்தம் 138 வரிகளில் இப்பட்டயத்தை எழுதியதாக செப்பேடு கூறுகிறது.
பழனிச் செப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் வைகை நீடுக எனும் பாடலுடன் செப்பேடு தொடங்குகிறது. பிறகு வரும் 3 பாடல்களிலும் அதை அடுத்த கவிதை நடை வரிகளிலும் முருகனின் புகழ் பாடப் படுகிறது. அதன் பிறகு உலகமும் உயிர்களும் தோன்றியது , கடவுளர்கள் மற்றும் மனிதர்கள் 4 வருணங்களாகப் பிறந்தது, 4 யுகங்கள் உண்டாகியது போன்றவை கூறப்படுகிறது. இதை அடுத்து விஜயநகர அரசர்கள், பிறகு மதுரை நாயக்க மன்னர்கள் பற்றிய பட்டியல் கூறப் படுகிறது. பட்டியலின் இறுதியில் திருமலை நாயக்கரின் புகழ் அவர் விருதுப் பெயர்களுடன் கூறப்படுகிறது.
இதை அடுத்து கன்னடிய தேசம் உள்ளிட்ட 7 தேசங்களின் கர்த்தாக்கள், திருமலை நாயக்கர், அவர் கோத்திரத்தார், 24 மனையார், சவளம் அஞ்சு, சாலிமூல சமூகம்,
96 வலங்கை சாதியினர் ஆகியோர் பழனியில் கூடி பங்குனி உத்திர பௌர்ணமி அன்று, ஸ்தானம் சின்னோப நாயக்கர், புலிப்பாணி, தவராசப்பண்டிதர் ஆகியோர் முன்னிலையில் இப்பட்டயத்தை எழுதியதாகச் செப்பேடு கூறுகிறது.
லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலுக்கு எதிரே தரும மடாலயம் உண்டு செய்து அதில் நந்தா தீபம் எரிப்பதற்கும், பழனி பங்குனி உத்திரத் திருவிழாவின் 8 ஆம் நாளில் மடத்தில் மண்டகப்படி நடத்தவும் முருகனுக்கு திருமஞ்சனம், திருக்கண், தூவக்காலுக்கும் தங்களுக்குள் வரிவசூல் செய்த செய்தியை விரிவாகக் கூறுகிறது.
வருடத்துக்கு தலைக் கட்டுக்கு 1 பணமும் கலியாணத்துக்கு பெண்/மாப்பிள்ளை வீட்டார் தலா 2 பணமும் திரட்டிக்கு 2, சீமந்தத்துக்கு 1 பணமும் கொடுக்க வேண்டும் என்று ஏற்பாடாகியதாகக் கூறும் செப்பேடு, அத்துடன் ஈயக்கடை, உத்திராட்சக்கடை, ஓலைக்கடை, வெங்கலக்கடை போன்ற கடைகளுக்கு விதிக்கப்பட்ட வரிப்பணம் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறது. இவ்வரியைக் கொடுக்காத பேர்களுக்கு உள்ள சாபத்தையும் இந்த தர்மத்துக்கு உபகாரம் செய்த பேர்களுக்கு வரும் பலனையும் செப்பேடு விரிவாகக் கூறுகிறது.
செப்பேட்டை எழுதியவர் பழனியப்பன். செப்பேடு, கோபால் உடையர் மகன் முத்துலிங்க உடையர் வசம் வழங்கப் பட்டுள்ளது. எனவே இவரே வரிவசூல் செய்யும் அதிகாரம் பெற்றவராவார் என்று கருதலாம். இறுதியாக 'தர்மமே செயம்' என்று எழுதப்பட்டு செப்பேடு முடிகிறது.
இதில் உள்ள வானிலைக் குறிப்புகளின் அடிப்படையில், செப்பேடு திருமலைநாயக்கரின் 12 ஆம் ஆட்சி ஆண்டில், அவருடைய 51 ஆம் வயதில் பழனி வருகையின் போது 01/04/1635 ல் எழுதப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
S.Karthick
கொற்றவை செய்தியாளர்