பலூன் சிலிண்டர் வெடித்து விபத்து: ஆற்றுத் திருவிழாவில் நிகழ்ந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
19 January 2026
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஆரணி ஆற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில், இன்று எதிர்பாராத விதமாக பலூன்களுக்கு காஸ் நிரப்பும் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த கோர விபத்தில் பலூன் வியாபாரி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவிழா கூட்டத்தின் நடுவே நடைபெற்ற இந்த சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், திருவிழாக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.