கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு

26 February 2026

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின் மூலம், கௌரவ விரிவுரையாளர்களின் தற்போதைய ஊதியம் ரூ. 25,000-லிருந்து ரூ. 30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கான ஊதியமும் ரூ. 20,000-லிருந்து ரூ. 25,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இதன் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 8,741 கௌரவ விரிவுரையாளர்கள் உட்பட மொத்தம் 9,646 தற்காலிகப் பணியாளர்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த கூடுதல் ஊதிய உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 53 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.