கௌதமாலா: கோர பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்த சோகம்

27 December 2025

கௌதமாலா சிட்டி:

மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் நிகழ்ந்த பயங்கர பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




கௌதமாலாவின் சொலோலோ (Solola) நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் இன்று ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.



மலைப்பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நிலவிய அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பார்வைத்திறன் (Visibility) மிகவும் குறைவாக இருந்துள்ளது. போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த 19 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்து குறித்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.