நாகை அருகே முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் சென்ற கார் விபத்து, காயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி, சீட்பெல்ட் அணிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓஎஸ் மணியன்...

05 October 2024

நாகை அருகே முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் சென்ற கார் விபத்து,  காயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி, சீட்பெல்ட் அணிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓஎஸ் மணியன்...


அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் வழக்கமாக நாகையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று கட்சி பணிகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஓரடியம்புலம் தனது இல்லத்திலிருந்து ஓட்டுநர் அருணை அழைத்துக் கொண்டு ஓ.எஸ்.மணியன் தனது காரில் நாகை நோக்கி புறப்பட்டுள்ளார். 

ஓ.எஸ்.மணியன் சென்ற காரானது, திருப்பூண்டி வளைவில் வேகமாக வந்த போது, காரைநகரைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி திடீரென இண்டிகேட்டர் போடாமல் திரும்பி உள்ளது.

அப்போது அவர் மீது கார் மோதாமல் இருக்க ஓட்டுநர் அருண் திடீரென பிரேக் போட்டுள்ளார். அதனை மீறி ஸ்கூட்டி மீது திடீரென கார் மோதி உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் நின்றிருந்த பாப்பா என்ற பெண்மணி மீதும் கார் மோதி இடித்து தள்ளியது.மேலும் காரானது அங்குள்ள பெரியாச்சி கோவில் சுற்றுச்சுவரில் மோதி நின்றது.

இந்த விபத்தில் அன்பழகனுக்கு தலை, முகம்,கை,கால்களில் காயம் ஏற்பட்டதுடன், பெண்ணுக்கும் காலில் காயம் ஏற்பட்டது. விபத்தின்போது ஓஎஸ் மணியன் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவரும், கார் ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனிடேயே விபத்தில் சிக்கிய அன்பழகன் மற்றும் பெண்மணி பாப்பா ஆகிய இருவரையும் மீட்டு  நாகையில் உள்ள ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் சென்ற கார் மோதி இருவர் காயமடைந்த சம்பவம் நாகையில்  பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்