சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து

28 February 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், சென்னையில் இருந்து துபை, தோஹா, அபுதாபி மற்றும் பஹ்ரைன் ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அனைத்து விமான சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் அங்கு வந்து சேர வேண்டிய பன்னாட்டு விமானங்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக துபை மற்றும் அபுதாபி விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா, எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையத்தில் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்று ஏற்பாடுகள் அல்லது பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவது குறித்து விமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.