இந்திய விவசாயிகளைப் பலிகடா ஆக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:

26 February 2026

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் இந்திய விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாகச் சாடியுள்ளார். குறிப்பாக, இந்த ஒப்பந்தங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் விளைபொருட்களால் இந்தியச் சந்தையில் விலழ்ச்சி ஏற்பட்டு, உள்ளூர் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். "இந்திய விவசாயிகள் ஏற்கனவே கடன் சுமையிலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமலும் தவித்து வரும் நிலையில், இத்தகைய ஒப்பந்தங்கள் அவர்களை மேலும் படுகுழியில் தள்ளும்" என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, விவசாயிகளைப் பலிகடா ஆக்கிவிட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.