பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரம்: திமுக அரசு அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
10 January 2026
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவகாரத்தில், திமுக அரசு அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
2021 சட்டமன்றத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் 'பழைய ஓய்வூதியத் திட்டம்' மீண்டும் கொண்டுவரப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டு காலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வந்துள்ளது.
அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களைச் சமாளிக்க வழி தெரியாமல், தற்போது ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ஒரு 'ஏமாற்று மாடல்' திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்' (Unified Pension Scheme - UPS) பெயரை மட்டும் மாற்றி, தமிழகத்தில் 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) எனத் தற்போது அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று விமர்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது மத்திய அரசின் திட்டத்தையே பெயர் மாற்றி அறிவித்து அரசு ஊழியர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளார். இந்த ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உள்ள உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.