எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 21 முதல் மீண்டும் தேர்தல் பிரசாரம்

14 February 2026

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் "புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்" என்ற பெயரில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.


இதன் அடுத்தகட்டமாக, வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு அவர் மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.


இதன்படி, பிப்ரவரி 21 அன்று மாலை 5 மணிக்கு ஆவடி மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்காக அம்பத்தூரிலும், 22-ஆம் தேதி மாலை மாதவரம் மற்றும் பொன்னேரியிலும் அவர் பேசுகிறார். தொடர்ந்து, 25-ஆம் தேதி மாலை வானகரத்தில் மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி தொகுதிகளுக்காகவும், 26-ஆம் தேதி மாலை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்காகவும் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.