அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
29 January 2026
அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு தான் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் நலன் கருதி பிரிந்து கிடப்பவர்கள் இணைய வேண்டும் என்றும், டி.டி.வி.தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி சம்மதித்தால் தான் இணையத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பொதுக்குழு முடிவின்படி நீக்கப்பட்டுவிட்டதால், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று விளக்கமளித்தார். மேலும், தற்போது சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவை முடிவானதும் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.