கடந்த 5 ஆண்டுகளில் திமுகவினர் ரூ. 4 லட்சம் கோடி கொள்ளை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
30 January 2026
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஐந்து கால திமுக ஆட்சியில் அக்கட்சியினர் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்தியாவிலேயே இவ்வளவு மோசமான ஆட்சி எங்கும் நடக்கவில்லை என்றும், திமுக ஆட்சியின் ஆயுள்காலம் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே என்பதால் தற்போது புதிய திட்டங்களை அவசர அவசரமாக அறிவித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பலமாக உள்ளதாகவும், இக்கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 210-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், இந்தத் தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை நடப்பதை திமுக அரசு தடுக்கவில்லை என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் சாடினார். மேலும், திமுக அரசு போடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெறும் காகித அளவிலேயே உள்ளதாகவும், அவை நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.