தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது வாழ்த்துச் செய்தியில் அவர் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்புமிக்க பண்டிகையாம் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என தெரிவித்துள்ள அவர் இந்த திருநாள் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாகவும் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும். துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும். வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து அனைவருக்கும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.