அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பிறர் நகலெடுக்கத் தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி

22 January 2026

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றவர்களின் தேர்தல் அறிக்கையை அதிமுக நகலெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கறிக்கோழி விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அவையில் இருந்து வெளியேறிய நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே 'குலவிளக்கு திட்டம்', மகளிருக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, பேருந்து பயணக் கட்டணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களை அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு தவறான செய்திகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டிய அவர், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.