2026 சட்டமன்றத் தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
23 February 2026
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையை இன்று (பிப். 23) தொடங்குகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK), கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (MNM) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (MMK) ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இதற்காக திமுக தரப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவினர், ஒவ்வொரு கட்சியும் எதிர்பார்க்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் விருப்பமான தொகுதிகள் குறித்து கேட்டறிய உள்ளனர். ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், கூட்டணி கட்சிகளுடனான இந்த இடப்பங்கீட்டை விரைந்து முடிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.