திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு
28 February 2026
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் உதயசூரியன் சின்னத்திலேயே மனிதநேய மக்கள் கட்சிப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதிப் பங்கீடு உறுதியானதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது. திமுக கூட்டணியில் மற்ற தோழமைக் கட்சிகளுடனான இடப்பங்கீடு குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.