2026 தேர்தல் களம்: அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை
19 January 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை போன்ற பணிகளை ஏற்கனவே முடித்துள்ள நிலையில், அடுத்தகட்ட வியூகங்களை வகுக்க இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்..
தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து வரும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான உறவு, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் செல்வாக்கு நிலை எப்படி உள்ளது, அரசு திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளதா என்பது போன்ற கள நிலவரங்கள் குறித்து முதல்வர் கேட்டறிய உள்ளார். குறிப்பாக, தேர்தல் பணிகளை அடிமட்ட அளவில் தீவிரப்படுத்த புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்படலாம்.
கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் பூத் கமிட்டி பணிகளின் தற்போதைய நிலை மற்றும் "உடன்பிறப்பே வா" நிகழ்வுகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய உறுப்பினர்களைத் தேர்தல் பணிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.