திமுக கூட்டணியில் தேமுதிக: 10 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவு
19 February 2026
கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என்று பெரிதும் எதிர்பார்த்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, "பழம் நழுவி பாலில் விழும்" என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போது அந்த முயற்சி கைகூடவில்லை. சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கருணாநிதியின் அந்தக் கூற்று இப்போது நனவாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஒரு மாநிலங்களவை (MP) உறுப்பினர் பதவி மற்றும் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுவரை அதிமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணியுடன் மட்டுமே கைகோர்த்து வந்த தேமுதிக, கட்சி தொடங்கப்பட்ட 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சபரீசன் ஆகியோர் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் பலனாக இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா தலைமையில் தேமுதிக எடுக்கும் இந்த முக்கிய அரசியல் முடிவு, 2026 தேர்தல் களம் மற்றும் வட மாவட்ட அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.