அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

28 October 2025

சென்னை கோவை சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர்கள் வரையிலான பணிகளுக்குத் தேவையான நபர்களை குத்தகை முறையில் வழங்கும் உரிமை தமிழக அரசின் "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்" என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசுத்துறைகளுக்குத் தேவையான பணியாளர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட மாட்டார்கள். எந்தெந்தப் பணிகளுக்கு எவ்வளவு பேர் தேவை? என்பதை இந்த நிறுவனத்திடம் தெரிவித்தால், தேவையான பணியாளர்களை ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனமே அனுப்பிவிடும். அவ்வாறு அனுப்பப்படும் பணியாளர்களில் அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட கடைநிலைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.13,000 வீதமும், நகல் எந்திரத்தை இயக்குபவருக்கு ரூ.15,000 வீதமும், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.20000 வீதமும், ஓட்டுனர், உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.25,000 வீதமும், அலுவலக கண்காணிப்பாளர் பணிக்கு ரூ.30000 வீதமும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக மேலாளர் மற்றும் அதற்கு இணையான பணிகளுக்கு அதிகபட்ச ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்பும் நிறுவனத்திற்கு 8.4% சேவைக்கட்டணத்தை 18% ஜி.எஸ்.டியுடன் செலுத்த வேண்டும் என்றும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த புதிய முறைப்படி கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் அவற்றுக்குத் தேவைப்படும் பணியாளர்களை இந்த நிறுவனம் மூலம் நியமித்துக் கொள்ளும்படி அதன் துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இது சமூகநீதிக்கு எதிரான, மிகவும் ஆபத்தான போக்கு ஆகும்.




அதேபோல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அரசுத்துறை அலுவலகங்கள் பல்கலைக்கழகங்கள் பள்ளிகள் போன்றவற்றில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் குத்தகை முறையிலும் தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த நியமனங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசுத்துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் மேலாளர் நிலை வரையிலான பணியிடங்களை குத்தகை முறையில் மனிதவள நிறுவனங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறைக்கு திராவிட மாடல் அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. இது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.


தருமபுரி செய்தியாளர் அருண்குமார்.ஜெ