திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை
14 February 2026
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற 47 தொகுதிகளுக்கான திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் வெற்றிக்காக அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜகவின் "டப்பா என்ஜின்" அரசியலுக்கு முன்னால், திராவிட மாடலின் "சூப்பர் பாஸ்ட் என்ஜின்" ஒருபோதும் தலைகுனியாது என்று குறிப்பிட்ட அவர், கொத்தடிமைகள் மூலம் தமிழகத்திற்குள் புறவாசல் வழியாக நுழைய நினைக்கும் பாஜகவின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜகவின் கிளைக் கழகச் செயலாளர் போலச் செயல்படுவதாகவும், தமிழக மக்களுக்காகப் பேசத் துணிவில்லாமல் பாஜகவிடம் அடிபணிந்து விட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். கடந்த ஐந்தாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் ஆயிரம் ஆண்டுகள் பேசப்படும் வகையில் அமைந்துள்ளதாகவும், வடமாநில ஊடகங்களே தமிழக அரசின் செயல்பாடுகளை முன்னுதாரணமாகக் காட்டுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நிர்வாகிகள் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்றும், சமூக ஊடகங்களைக் காட்டிலும் வாக்காளர்களைக் குறைந்தது ஐந்து முறையாவது நேரில் சந்தித்து கனிவுடன் அணுகி, தேர்தல் நாள் வரை அவர்களின் ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.