தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரைக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், நாளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியை நேரில் தொடங்கி வைத்துப் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். முதலமைச்சரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.